கட்டடத் தேவைக்கான மணலை பெறுவதில் இழுபறி – பயனாளிகள் கவலை!

Sunday, July 22nd, 2018

வீட்டுத்திட்டத்துக்கான மணல் விநியோகம் இடம்பெறாததால் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் கட்டப்பட்டுவரும் வீடுகளை உரிய காலத்தில் முழுமைப்படுத்துவதில் சிக்கலை எதிர்கொள்கின்றோம் என்று பயனாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

உரிய காலத்துக்குள் வீடுகள் கட்டப்படுவதை முழுமைப்படுத்துவது தாமதப்படுவதால் பெருமளவில் சிக்கல்களை எதிர்கொள்வதாக வீட்டுத்திட்டப் பயனாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சங்கானை, சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுகளில் அதிகார சபையின் அனுசரணையில் கட்டப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்கள் ஆனது முடிவடையும் நிலைக்கு வந்துள்ளபோதும் பூச்சு மணல் இதுவரை கிடைக்கவில்லை. பூச்சு வேலையைப் பூர்த்தி செய்து வீட்டுத்திட்டத்தை முழுமைப்படுத்த முடியாமல் உள்ளது. ஆனால் பிரதேச செயலகத்தினூடாக மணல் பெறுவதற்கான உரிமப் பத்திர இலக்கங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டபோதும் அந்தப் பத்திரங்களைப் பயன்படுத்திப் பணம் செலுத்தவோ அல்லது மணலைப் பெறவோ முடியாமல் உள்ளதாகவும் உரிய அதிகாரிகள் இந்த விடயத்தில் கவனமெடுத்துத் தமக்கு மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகின்றனர்.

இது தொடர்பாக பாரவூர்திச் சங்கத்தினர் தெரிவித்ததாவது:

கடந்த மூன்று மாதங்களாக மணல் ஏற்றுவதற்கு கனியவளத் திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப்பெறவில்லை. தாமதம் ஏற்பட இதுவே காரணம். சில வாரங்களுக்கு முன்னர் 8 நாள்களுக்கு மாத்திரம் மணல் ஏற்ற அனுமதி கொடுக்கப்பட்டது. பின்னர் ஒன்றரை மாத காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை பிரதேச செயலகங்களின் அனுமதி பெற்று எம்மிடம் கிட்டத்தட்ட 700 பேர் அளவில் மணலுக்காக பணம் செலுத்தியுள்ளனர். ஆனால் கனியவளத் திணைக்களம் மணல் ஏற்றுவதற்குத் தொடர்ந்து அனுமதி வழங்குமாயின் மணலுக்காப் பதிவு செய்தோருக்கு உடனடியாக மணல் பெற்றுக்கொடுக்கப்படும்.

மணல் பெற்றுத்தருவதற்கு கூடிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் என்று மாவட்டச் செயலர் சங்கத்திடம் கூறியுள்ளார். எம்மிடம் போதியளவு ஆளணியினர் உள்ளனர். வாகனங்களும் உள்ளன.

இருந்தும் கனியவளத் திணைக்கள அனுமதிக்காகக்காத்திருக்க வேண்டியுள்ளது. தற்சமயம் 10 நாள்களுக்கு மணல் ஏற்றுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. தொடர்ந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில் உரியவர்களுக்கு மணல் பெற்றுக்கொடுப்பதோடு தொடர்ந்து பதிவு செய்பவர்களுக்கும் மணலைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்று தெரிவித்தனர்.

Related posts: