கடும் சுகாதார நடைமுறைகளுக்கு மத்தியில் சிறப்புற நடைபெற்ற நல்லூர் கந்தனின் கொடியேற்ற உற்சவம்!

Saturday, July 25th, 2020

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணியளவில் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுக்கு மத்தியில்  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

நாட்டில் கொரோனா நெருக்கடி காரணமாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உற்சவத்தினை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆலயத்திற்கு வருகைதந்த அடியவர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆலய வழிபாட்டில் ஈடுபட்டார்கள்.

ஆலயத்தின் உட்புறத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அடியார்கள் அனுமதிக்கப்பட்டதோடு சமூக இடைவெளியைப் பின்பற்றக்கூடியவாறு ஆலய நிர்வாகத்தினரால் மக்கள் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேபோல், ஆலயத்திற்கு வெளியிலும் பொலிஸாரினால் சமூக இடைவெளியைப் பின்பற்றி ஆலய உற்சவத்தை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை கொண்டுவராதவர்கள் ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதேவேளை 25 நாட்கள் இடம்பெறவுள்ள இந்தப் பெருந்திருவிழாவில், 10 ஆம் நாளான ஓகஸ்ட் 03 ஆம்திகதி மஞ்சத் திருவிழாவும், ஓகஸ்ட் 12 ஆம் திகதி சூர்யோற்சவமும் அன்று மாலை கார்த்திகை உற்சவமும் இடம்பெறவுள்ளன.

13 ஆம் திகதி வியாழக்கிழமை கைலாச வாகனமும், மறுநாள் வெள்ளிக்கிழமை வேல் விமானத் திருவிழாவும், 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சப்பைரதத் திருவிழாவும் அடுத்த நாள்  17 ஆம் திகதி திங்கட்கிழமை தேர்த் திருவிழாவும், 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: