கடல் உணவுகள் இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியை குறைக்க திட்டம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் !

Friday, August 28th, 2020

கடல்சார் உணவு இறக்குமதிக்காக வருடாந்தம் செலவிடப்படும் அந்நியச் செலாவணியை குறைக்கக்கூடிய பல்வேறு விடயங்களை திட்டமிட வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் மீன், கருவாடு, மாசி மற்றும் டின்மீன் இறக்குமதிக்காக வருடாந்தம் அரசு சுமார் 500 மில்லியன் டொலர்கள் செலவிடுகின்றது. கடற்றொழில் கைத்தொழில் மொத்த தேசிய உற்பத்திக்கு இதுவரை காலமும் வழங்கியுள்ள பங்களிப்பு 1% வீதமாகும்.

அந்தவகையில் நாட்டை சுற்றி கடலினாலும் நாட்டினுள் உள்ள குளங்களினாலும் சரியான பயன்களைப் பெற்று அந்நியச் செலாவணியை அதிகரித்துக் கொள்ளக்கூடிய ஏற்றுமதிக்குள் கடற்றொழில் கைத்தொழில் உள்வாங்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் அழகு மீன்கள் நன்னீர் மீன்கள் மற்றும் இறால்களை வளர்த்தல் கடற்றொழில் துறைமுக அபிவிருத்தி ஆழ்கடல் பல நாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன்கள் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

அலங்கார மீன்கள் ஏற்றுமதியில் நன்னீர் மீன்கள் 95% வீதமும் உவர் நீர் மீன்கள் 98% வீதமும் உள்நாட்டில் இனவிருத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும். சுமார் 700 வகையான அலங்கார மீன்களை ஏற்றுமதி செய்ய முடியுமென்று அலங்கார மீன் கைத்தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இலங்கைக்குரிய நன்னீர் மீன்களை இனவிருத்தி செய்து ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்ள முடியுமென்று இக்கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டது.

உலகில் அதிக கேள்விக்குரிய நீர்த்தாவர கன்றுகளை இறக்குமதி செய்து உற்பத்தி நிலையங்களில் பயிரிட்டு மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு உள்ள தடைகளை இலகுபடுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் நாட்டினுள் 18,000  குளங்கள் காணப்படுகின்றன. ஆனாலும் நன்னீர் மீன் வளர்ப்பிற்கு 1500 குளங்களே பயன்படுத்தப்படுகின்றன. இக்கைத்தொழிலின் அபிவிருத்திக்காக நன்னீர் மீன்களை வளர்க்கக்கூடிய குளங்களை இனங்கண்டு கிராமிய மக்களின் புரத தேவையை நிறைவு செய்வதற்கு முடியுமென்று பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: