கடலட்டைப் பண்ணைகளின் மீன் வளம் அழியும் என்பது அப்பட்டமான பொய் – யாழ். கடற்றொழிலாளர்கள் தெரிவிப்பு !

Tuesday, December 13th, 2022

ஆழங் குறைந்த சூடான நீர்ப்பரப்பில் அமைக்கப்படும் கடலட்டைப் பண்ணைகளினால் மீன்களின் இனப் பெருக்கம் பாதிக்கப்படும் என்பது தீய நோக்கோடு மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி என்று தெரிவித்துள்ள யாழில் கடலட்டைப் பண்ணைகளை அமைத்துள்ள கடற்றொழிலாளர்கள், கடலட்டைப் பண்ணைகள் சரியான முறையில் உரிய நியதிகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டவிரோத அட்டைப் பண்ணை இருந்தால் காட்டுங்கள், அதனை அகற்றுவதற்கு தயாராகவே இருக்கிறோம் எனவும் தெரிவித்தனர்.

இன்று செவ்வாய்க்கிழமை கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ள யாழ் கடற் பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்களை நேரடியாக அழைத்து செல்லப்பட்டு, கடலட்டைப் பண்ணைகளின் அமைப்பு தொடர்பாகவும் அவை பாரம்பரிய கடற்றொழிலாளர்களுக்கு இடையூறு இன்றி அமைக்கப்பட்டிருக்கின்றமை தொடர்பாகவும் அட்டைப் பண்ணைகளை அமைத்துள்ள கடற்றொழிலாளர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்போது மேற்படி விடயங்களை தெரிவித்த குறித்த கடற்றொழிலாளர்கள் மேலும் தெரிவிக்கையில்,
கடற்றொழிலாளர்களின் வாழ்வில் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற பொருளாதார மீட்சியை குழப்புகின்ற வகையில் கடலட்டைப் பண்ணை தொடர்பாக வெளியாகி வருகின்ற கருத்துக்கள் எமக்கு வேதனை தருகிறது.

கடலட்டைப் பண்ணைகள் அனைத்து நடைமுறையகளையும் பின்பற்றியே அமைக்கப்பட்டு வருகின்றன.

எனினும் சில கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திர ஆவணங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அதற்காக அவற்றை சட்ட விரோத பண்ணைகளாக கருத முடியாது.

சாதாரணமாக பண்ணைகளுக்கான அனுமதி ஆவணவ ரீதியாக(பேப்பர் வேர்க்) நிறைவு செய்து கடலட்டை பண்ணையை அமைப்பதற்கு குறைந்தது 3 மாதங்கள் தேவைப்படும்.

மக்கள் எதிர்கொள்ளுக்கின்ற பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் எடுத்து,
ஆவண ரீதியான அனுமதியைப் பெறுவதற்கான காலதாமதத்தினை தவிர்க்கும் வகையில், தளுவல் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும், குறித்த தளுவல் அனுமதிகள் கௌரவ அமைச்சரினால் தான்தோன்றித்தனமாக வழங்கப்படுவதில்லை.

கடற்றொழில் திணைக்களம், நாரா, நக்டா, சம்மந்தப்பட்ட பிரதேச செயலகம் உட்பட்ட சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் பரீட்சித்து,

நீர் வாழ் உயிரினங்களுக்கோ அல்லது சூழலுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்திய பின்னர், சம்மந்தப்பட்ட பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திய பின்னரே, பண்ணைகள் அமைப்பதற்கு அனுமதிகள் அளிக்கப்படுகின்றன.

அதேவேளை, சிலரினால் எந்த திணைக்களங்களுடனும் தொடர்பு கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக சில பண்ணைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளதாக நாங்களும் அறிகின்றோம்.

அவை அகற்றப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. இதனை கடற்றொழில் அமைச்சரும் வலியுறுத்தி இருப்பதை செய்திகளில் அவதானித்திருக்கின்றோம்.

ஆகவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை அளிக்கும் முகமாக ஒரு சிலர் செயல்படுவது கவலை அளிக்கின்ற நிலையில் சட்ட விரோத பண்ணைகள் இருக்குறது எனக் கூறுபவர்கள் அதனை இனங்காட்டுங்கள் அகற்றுகிறோம்” என்று தெரிவித்தனர்.

மேலும் சிலர், கடல் மாசடையும், மீன்வளம் பெருகாது போன்ற கருத்துக்களை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆழம் குறைந்த சூடான கடல் நீர் உள்ள பகுதியிலேயே அட்டை வளர்ப்பு இடம்பெறுகிறது.

சூடான நீரில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதோ அல்லது முட்டையிடுவது மிகவும் சாத்தியம் குறைவு.

இதைப் பற்றி பேசுபவர்களுக்கு அனைத்து விடயங்களும் தெரிந்தும் மக்களை குழப்பும் வகையில், தவறான குறுகிய நோக்கங்களுக்காக முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர், எனவும் கடலட்டைப் பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Related posts: