கடந்த 5 வருடங்களை விட இந்த வருடம் விவசாய ஏற்றுமதியால் 86 ஆயிரம் மில்லியன் வருமானம் – ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவிப்பு!

Monday, September 4th, 2023

கடந்த 5 வருடங்களை விட இந்த வருடம் விவசாய ஏற்றுமதியால் 86,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுவா, மிளகு மற்றும் கராம்பு ஏற்றுமதி மூலம் பிரதானமாக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் அபிவிருத்திப் பணிப்பாளர் உபுல் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கருவாப்பட்டை அல்லது இலவங்கப்பட்டை சாகுபடி, உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பிரத்தியேகமாக வசதியாக கருவாப்பட்டை அபிவிருத்திக்கான திணைக்களத்தை இலங்கை விரைவில் நிறுவவுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பிரேரணை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோரால் இணைந்து கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கைக்கு கணிசமான அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தரக்கூடிய கருவாப் பட்டையை பிரதான வர்த்தகப் பயிராக ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி விக்கிரமசிங்க அண்மையில் சுட்டிக்காட்டினார்.

2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில், மசாலா பொருட்கள் ஏற்றுமதியின் மூலம் இலங்கை 176 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது.

மேலும், இலங்கை கறுவாப்பட்டைகளினால் 2022இல் 368.7 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இது 2021 இல் 454.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலவங்கப்பட்டை உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவது மற்றும் பெறுமதி கூட்டல் மற்றும் பல்வகைப்படுத்தல் மூலம் இலவங்கப்பட்டை உற்பத்திகளின் தரத்தின் பெறுமதியை அதிகரிப்பதே புதிய திணைக்களத்தை அமைப்பதன் நோக்கமாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: