கச்சதீவு யாழ். ஆயரின் வேண்டுகையின் பேரிலேயே நிர்மாணிக்கப்படுகின்றது.  

Monday, May 16th, 2016

கச்சதீவில் ஆலயம் கட்டுவது தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை அது யாழ். மறைமாவட்ட ஆயர் ஞானபிரகாசம் ஆண்டகையின் கீழ்தான் உள்ளது. அவர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில்தான் கச்சத்தீவில் இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியுடனும், அனுமதியுடனும் தேவாலயம் புனரமைக்கப்படுகின்றது என யாழ்ப்பாணம் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் தெரிவித்துள்ளார்.

கச்சதீவில் தேவாலயம் கட்டப்படுவது தொடர்பாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கும் போதே  அருட்தந்தை இவ்வாறு குறிப்பிட்டார்.

கச்சதீவு ஒப்பந்தத்தின்படி கிறிஸ்தவ தேவாலயம் மாத்திரம் அப்பகுதியில் கட்ட முடியும் எனவும் அருட்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கடந்த 1974 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கச்சதீவு ஒப்பந்தத்தின்படி தற்போது கச்சதீவு அந்தோனியார் ஆலயம் யாழ் மறைமாவட்டத்தின் நிர்வாகத்திலேயே இருப்பதாக சுட்டிக்காட்டிய அருட்தந்தை, குறித்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை என தெரிவித்தார்.

அத்துடன் கச்சதீவில் நூறாண்டுகளுக்கும் பழைமையான தேவாலயம் இருக்கும் நிலையில், புதிய கட்டடத்தைக் கட்டித் தருமாறு இலங்கைக் கடற்படையினரிடம் கடந்த பெப்ரவரி மாதத்தில் யாழ்ப்பாண ஆயர் ஞானபிரகாசம் அடிகளார் வாய்மொழியாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன் பிறகு இலங்கை அரசுக்கும் இதுதொடர்பாக அவர் கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில்தான் புதிய தேவாலயக் கட்டடம் அமைக்கப்படுகிறது. இந்த முடிவை இலங்கைக் கடற்படை தன்னிச்சையாக எடுக்கவில்லை. கடலுக்கு நடுவில் உள்ள தீவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அதை இலங்கை கடற்படை மேற்கொள்கிறது எனவும் எதிர்வரும் திருவிழாவிற்கு முன்னர் ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: