ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Friday, December 8th, 2023

புதிய நாட்டைக் கட்டியெழுப்பும்போது புதிய பொருளாதாரம் அவசியம் எனவும், இமயமலைப் பிரகடனம் போன்ற வெளியீடுகள் முக்கியமானவை எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ரணில் விகரமசிங்க ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 06 முக்கிய விடயங்களை உள்ளடக்கிய “இமயமலைப் பிரகடனத்தையும்” கையளித்தள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் விகரமசிங்க இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.  இதன்போது அவர் மேலும் கூறுகையில் –  

பல வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் கடந்த பொருளாதார நெருக்கடிக்கும் முகங்கொடுத்து பெரும் இன்னல்களை எதிர்கொண்டனர். ஆனால், அண்மைய பொருளாதார நெருக்கடியின்போது, எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் கசப்பான அனுபவங்கள் ஒரு சில மாதங்கள் நீடித்ததாகவும், இதை வடக்கு கிழக்கு மக்கள் பல வருடங்களாக அனுபவித்ததாகவும் ஜனாதிபதி நினைவு கூர்ந்திருந்தார்.

மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியைப் பாதித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் வடக்கு கிழக்கு மற்றும் பெருந்தோட்டங்களில் உள்ள பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டம், அந்த மாகாணங்களை மையமாக வைத்து நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.

இதன்படி, பூநகரி நகரம் எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக மாறும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் செயற்திட்டத்தைப் பாராட்டிய உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள், அதற்கு தமது முழு பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் “இமயமலைப் பிரகடனம்” வெளியிடக் கிடைத்தமை குறித்தும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். .

000

Related posts: