ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நாளை ஆரம்பம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, September 1st, 2020

வறுமை நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானமுடைய மற்றும் தேர்ச்சி பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும் எனவும்அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்கும் பட்சத்தில் தொழில்வாய்ப்பு நிராகரிக்கப்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய எவ்வித கல்வித் தகைமையும் இல்லாத அல்லது க.பொ.த சாதாரண தரத்தை விடவும் குறைந்த கல்வி நிலையில் உள்ளவர்களும் பயிற்சி பெறாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

அத்தோடு, விண்ணப்பம் கோரப்படும் தினத்தில் 18 வயதிற்குக் குறைவாகவும் 40 ஐ விட அதிகமாகவும் இருக்காமை, சமுர்த்தி நிவாரணம் பெறுவதற்குத் தகுதி இருந்தும் பெறாத குடும்பத்தின் தொழிலற்ற உறுப்பினராக இருத்தல் அல்லது சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பத்தில் தொழிலற்ற உறுப்பினராக இருத்தல் போன்ற தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் வயது முதிர்ந்த, நோயாளியான பெற்றோர் அல்லது ஊனமுற்ற உறுப்பினரைக் கொண்ட குடும்பத்தில் உறுப்பினராக இருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஒரு குடும்பத்தில் மேலே குறிப்பிடப்பட்ட தகுதிகளைக் கொண்ட ஒரு விண்ணப்பதாரி மாத்திரம் கவனத்தில் எடுக்கப்படும் என்றும் விண்ணப்பதாரிகள் வசிக்கும் பிரதேசங்களில் நிலவுகின்ற தொழில் வாய்ப்புக்கள் மற்றும் விண்ணப்பதாரி கேட்டுள்ள பயிற்சி துறைகள் அனைத்தையும் கவனத்திற்கொண்டு, குறித்த தொழில் பயிற்சிக்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துன் தெரிவு செய்யப்படும் நபர் வசித்துவரும் பிரதேசத்தில் அல்லது அதற்கு அருகில் உள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சி வழங்கப்படும் என்பதோடு, சிறப்பான பயிற்சியின் பின்னர் வசிக்கும் பிரதேசத்தில் அல்லது அருகில் உள்ள பிரதேசத்தில் தொழில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 6 மாதகால தொடர் பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளமும் சிறப்பான பயிற்சியை முடித்த பின்னர், தாம் பயிற்சி பெற்ற துறையில் தமது நிலையான வதிவிட பிரதேசத்தில் அரசு அனுமதி பெற்ற ஆரம்ப கைவினைஞர் அல்லாத சம்பளம் 35 ஆயிரம் மற்றும் கொடுப்பனவுகளைக் கொண்ட அரசின் நிலையான பணிக்கு நியமிக்கப்படுவதற்குப் பயிற்சி பெற்றவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு 10 வருடகால சிறப்பான தொடர் சேவை காலத்தை நிறைவு செய்ததன் பின்னர் அரசின் ஓய்வூதியமும் வழங்கப்படவுள்ளதாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: