ஐ. நா. 72 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடர் இன்று!

Tuesday, September 12th, 2017

ஐ. நா. சபையின் 72 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியூ யோர்க் நகரிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த கூட்டத் தொடர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சிறப்புரையாற்றவுள்ளார்.

இந்தக் கூட்டத்தொடரில், இலங்கையின் விவகாரங்கள், நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்படவில்லை.

எனினும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் இலங்கை குறித்து கேள்விகளை எழுப்புவதற்கு வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரின் அரச தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச் சபையில் உரை நிகழ்த்தவுள்ளார். இதனை முன்னிட்டு ஜனாதிபதி எதிர்வரும் 17 ஆம் திகதி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஜனாதிபதி அமெரிக்காவில் தங்கியிருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து அவர் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள ஆசியாவின் அரச தலைவர்கள் சிலரையும் ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடர் சுவிஸர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று (11) ஆரம்பமாகியது. ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தலைமையிலான குழு இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: