ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் அக்கிராசன உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, February 8th, 2023

இனமத பேதமின்றி அனைத்து மக்களும் முகங்கொடுக்கும் பொது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அக்கிராசன உரையில் தெரிவிதுள்ளார்.

அதிகாரப் பகிர்வு செயன்முறையினை முறையாக மற்றும் உரியவாறு நடைமுறைப்படுத்துவதற்காக 1992 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க அதிகாரப் பகிர்வு பிரதேச செயலாளர்கள் சட்டம், 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் இடைநேர் விளைவு ஏற்பாடுகள் சட்டம் மற்றும் 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் திருத்த சட்டம் ஆகிய சட்டங்களுக்கான திருத்த வரைவுகள் தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்துக்கு இடையில் ஒருங்கிணைப்பு பணிகளை முறைமைப்படுத்துவதற்காக நவீன முறையில் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையினை தாபிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து சட்டங்கள் மற்றும் வரைவுகளை நாம் நாடாளுமன்றத்தின் தேசிய சபைக்கு சமர்ப்பிப்போம். அது தொடர்பாக கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு தேசிய சபைக்கு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, பிரதிப் காவல்துறைமா அதிபர் பிரிவு எல்லைகள் தற்பொழுது மாகாண எல்லைகளின் பிரகாரம் காணப்படுவதில்லை.

இதன் காரணமாக பிரயோக ரீதியான பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளன. எனவே மாகாணங்களின் பிரகாரம் பிரதிப் காவல்துறை அதிபர் பிரிவு எல்லைகளை நிர்ணயிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் எந்தவித மாற்றங்களும் இடம் பெறமாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்..

Related posts: