ஏற்கனவே திரட்டப்பட்ட ஊழியர் சேமலாப நிதி கடன் மறுசீரமைப்பின்போது கையாளப்பட மாட்டாது – இலங்கை மத்திய வங்கி ஆளுநர் உறுதிபடத் தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023

ஏற்கனவே திரட்டப்பட்ட ஊழியர் சேமலாப நிதி, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின்போது, கையாளப்பட மாட்டாது என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார்.

அத்துடன், ஊழியர் சேமலாப நிதியத்திற்கு குறைந்தபட்சம் 9 சதவீத வட்டி வீதத்தை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில், ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது, ஊழியர் சேமலாப நிதியமும் மறுசீரமைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், மத்திய வங்கி ஆளுநர் இந்த விளக்கத்தை வழங்கியுள்ளார்.

ஏற்கனவே 50 சதவீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 5 மில்லியன் வைப்பாளர்களைப் பாதுகாப்பதை உறுதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வங்கித் துறையில் சரிவு ஏற்பட்டால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதால், வங்கித் துறையைப் பாதுகாக்க வேண்டியது அத்தியாவசியமானது என்றும் மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: