ஏப்ரல் 21 தாக்குதல்: வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.!

Sunday, June 23rd, 2019

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக உண்மைக்குப் புறம்பான சாட்சியங்களை வழங்குபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என அதன் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்

எவராவது ஒருவரினால், உண்மைக்குப் புறம்பான வாக்குமூலத்தை வழங்குவதற்காக சாட்சியங்கள் முன்வைக்கப்படுமாயின், தெரிவுக்குழு உறுப்பினர்கள் இணைந்து, அது குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்த முடியும் என எமது செய்திச் சேவையிடம் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கும்போது, குறித்த தரப்பினர், தான் கூறுவது உண்மையான சாட்சியமாகும் என உறுதிமொழி வழங்குவார்.

இவ்வாறானதொரு தெரிவுக்குழுவில், உறுதிமொழியை வழங்கிவிட்டு, அதனை மீறுவதற்கு, எந்தவொரு தகுதி நிலைமையில் உள்ளவர்களுக்கும் அதிகாரம் இல்லை என்றும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக முன்னிலையான, சிலோன் தொளஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராஸிக், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை நிராகரிப்பதாக தெரிவித்திருந்தார்.

எனினும், சமூகவலைதளங்களில் பதிவாகியுள்ள அவரின் போதனைகள் அடங்கிய காணொளியில், ஐ.எஸ்.ஐ.எஸ் இன் செயற்பாடுகளுடன் தான் இணங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்

Related posts: