ஏப்ரல் 21 தாக்குதல் : உள்நாட்டு வெளிநாட்டுத் தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன – அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர!

Thursday, March 11th, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தூண்டிய காரணங்கள், அது முன்னெடுக்கப்பட்ட விதம், அதன் இலக்குகள், நிதி கிடைத்த வழி வகைகள் உட்பட உள்நாட்டு வெளிநாட்டுத் தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர், இந்த தாக்குதலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய அனைவருக்கு எதிராக உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்படுவதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் தாக்குதலுடன் தொடர்புடைய 676 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதில் 200 பேர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 66 பேர் தடுப்பு உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள். பிணையில் விடுவிக்கப்பட்டோரும் விசாரிக்கப்படுகிறார்கள். இதற்கு மேலதிகமாக தாக்குதலுடன் தொடர்புடைய 3 அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. அரசாங்க புலனாய்வுப் பிரிவு செயலிழந்தமையால் இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் புலனாய்வுப் பிரிவை மீண்டும் வலுப்படுத்தியிருக்கிறது. தாக்குதலுடன் தொடர்புடைய 54 வெளிநாட்டவர்கள் 5 நாடுகளின் உதவியோடு கைது செய்யப்பட்டார்கள்.

இதில் 50 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் 5 வயது தொடக்கம் 16 வயதான சகல பிள்ளைகளுக்கும் அரசாங்கத்தின் கல்விக் கொள்கைக்கமைய கற்பிக்கப்படுவது அவசியமாகும். இதற்கு முரணான சகல பாடசாலைகளும் தடை செய்யப்படவிருக்கின்றன.

மத்ரஸா பாடசாலைகளை கல்வித் திணைக்களத்துடன் இணைந்து ஒழுங்குறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் இயங்கும் 11 தீவிரவாத அமைப்புகள் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றைத் தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்.

Related posts: