ஏனைய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் எமது பகுதி மாணவர்களுக்கும் வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுஷியா!

Thursday, February 28th, 2019

யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டி 3 ஆம் 4 ஆம் கட்டை சாட்டி வேலணை ஊடாக ஊர்காவற்றுறைக்கும் அதேபோல யாழ்ப்பாணம் – வங்களாவடி சந்தி வேலணை துறையூர் சுருவில் புளியங்கூடல் ஊடாக ஊர்காவற்றுறையும் நோக்கி செல்லும் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலைக்குரிய வழிப்பாதை 780 இலக்க பேருந்து தனது பாடசாலை சேவையை முற்றாக நிறுத்தியுள்ளதுடன் பொதுமக்களுக்கான சேவையையும் நாளுக்கு ஒரு தடவை மேற்கொள்ளும் நிலை காணப்படுகின்றது.

இதனால் குறித்த பகுதிகளில் வாழும் மக்களுடன் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் நாளாந்தம் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவருகின்றனர். அந்தவகையில் மக்களின் தேவைப்பாடுகளை பெற்றுக்கொடுப்பதே எமது பிரதேச சபையின் முதன்மையான பணியாக காணப்படுவதால்; குறித்த 780 வழி பேருந்து சேவையை மீளவும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை நாம் எமது சபை ஊடாக மேற்கொண்டு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும். என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி ஜெயகாந்த் அனுஷியா கோரிக்கை விடுத்துள்ளார்.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் இன்றையதினம் தவிசாளர் கருணாகரகுரு மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதன்போது குறித்த விடயம் தொடர்பில் பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் தீவக மக்களின் போக்குவரத்துக்கு மட்டுமல்லாது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளிலும் இலங்கை போக்குவரத்து துறை அதிக அக்கறை செலுத்தி வந்திருந்தது. ஆனாலும் தற்போது அவ்வாறான ஒரு நிலை காணப்படுவது குறைவாகவே காணப்படுகின்றது.

சுமார் 5, 6 ஆண்டுகளுக்கு முன்னர் வரை நடைபெற்ற இந்த 780 இலக்க சேவையானது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் தீவகப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் அல்லைப்பிட்டி 3 ஆம் கட்டை 4 ஆம் கட்டை சாட்டி ஆகிய பகுதிகளிலிருந்து வேலணை மத்திய கல்லூரி வங்களாவடி சரஸ்வதி உள்ளிடட்ட பிரபல பாடசாலைகளுக்கும் செல்லும் மாணவர்கள்; நாளாந்தம் பெரிதும் பாதிக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

குறித்த 780 வழி போக்குவரத்து சேவை பாடசாலை சேவையாகவும் பொதுச் சேவையாகவும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால் அதனூடாக ஒரு மாணவனுக்கு பருவகால சீட்டு மூலம் குறைந்தது மாதாந்தம் 50 தொடக்கம் 70 ரூபா வரையே போக்குவரத்து செலவு காணப்படும். ஆனால் தற்போது நாளாந்தம் 15 ரூபா முதல் 20 ரூபாய்வரை மாணவர்கள்; போக்குவரத்திற்காக செலவிட நேரிடுகின்றது. அந்தவகையில் யாழ் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையூடாக கிடைக்கின்ற சலுகைகள் இச்சேவை நிறுத்தப்பட்டுள்ளதால்; எமது மாணவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளதாகவே பார்க்க வேண்டியுள்ளது.

வறிய மாணவர்களை அதிகம் கொண்டுள்ள தீவகப்பகுதிளில் தமது பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள பெற்றோரும் மாணவர்களும்; நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் இடர்பாடுகளும் ஏராளம். இதில் குறிப்பாக போக்குவரத்து தொடர்பிலேயே அவர்கள் பல துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் மக்களினது நலன்களை முன்னிறுத்தி இலங்கை போக்குவரத்து சேவை தனது சேவையை மேற்கொண்டு வரும் நிலையில் இப்பகுதி மாணவர்களதும். பொது மக்களதும் அரச ஊழியர்களதும் அவல நிலைமை தொடர்பில் அவர்கள் கண்டுகொள்ளாதிருப்பது வேதனையாக உள்ளது.

அந்தவகையில் மாணவர்களினதும் பொதுமக்களினதும் நன்மை கருதி எமது சபை அதற்கான முயற்சிகளை துறைசார் தரப்பினருடன் மேற்கொண்டு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் நான் என சபையில் ஒரு பிரேரணையாக முன்வைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

குறித்த பிரேரணை சபையின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: