எவருக்கும் நான் மண்டியிட மாட்டேன் – ஜனாதிபதி!

Thursday, October 13th, 2016

எனது பொறுப்புகளில் தலையிடும் எவருக்கு முன்பாகவும் நான் மண்டியிட மாட்டேன். பாதுகாப்புக் படைகளைப் பலவீனப்படுத்தும் வகையில் செயற்படவும் மாட்டேன். ஏனையவர்கள் அவ்வாறு செயற்பட விடவும் மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறித்தும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை பாதுகாப்பு அமைச்சில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி,“இந்த வழக்கில் சட்டவாளர்களே பின்னணியில் இருந்துள்ளனர்.

அவர்களைப் பற்றி அதுவரை எனக்குத் தெரியாது. அன்று காலை தான் இந்த வழக்குப் பற்றி அறிந்தேன். பல்வேறு நோக்கங்களுக்காக சுதந்திர ஆணைக்குழுக்களை உருவாக்குவதற்கு ஒரு கொள்கை இருக்கிறது.

இந்த சுதந்திர ஆணைக்குழுக்களில் உள்ளவர்கள் தமது விடயப் பரப்பை அறிந்திருக்க வேண்டும். அவர்கள் யோசிக்காமல் தவறான முடிவுகளை எடுக்கும் போது, தேசிய பாதுகாப்பு, இராணுவ நிர்வாகம், முகாமைத்துவம் பற்றி அறிந்திருப்பதில்லை. இதுபோன்ற விடயங்களில் குறித்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் எனக்குத் தெரியப்படுத்த வேண்டிய உரிமையும் பொறுப்பும் உள்ளது.

அவ்வாறாயின் இது சுதந்திர ஆணைக்குழுக்கள் அல்ல என்று சிலர் கூறலாம்.

சுதந்திர ஆணைக்குழுக்களுக்கான ஆணையாளர்களை அரசியலமைப்பு சபையே நியமித்தாலும், அதிபர் என்ற வகையில் அதன் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகிய பதவிகளுக்குரியவர்களை நானே நியமிக்கிறேன்.

அவன்ட் கார்ட் வழக்கு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தை மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிலர் தமது அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துகின்றனர்.நீதித்துறையில் தலையீடு செய்வதற்காகவோ, சுதந்திர ஆணைக்குழுக்களில் தலையீடு செய்வதற்காகவோ, வல்லுறவுக் குற்றவாளிகளை விடுவிக்குமாறு சட்டமா அதிபருக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவோ நான் அதிபராகத் தெரிவு செய்யப்படவில்லை.

அரசியல் சீர்திருத்தத்தை ஏற்படுத்தவும், ஜனநாயகத்தை மீளமைக்கவும். நீதிச் சுதந்திரம் மற்றும் சட்டம் ஒழுங்கை ஏற்படுத்தவுமே நான் தெரிவு செய்யப்பட்டேன். எனது பொறுப்புகளில் தலையிடும் எவருக்கு முன்பாகவும் நான் மண்டியிட மாட்டேன். பாதுகாப்புக் படைகளைப் பலவீனப்படுத்தும் வகையில் செயற்படவும் மாட்டேன். ஏனையவர்கள் அவ்வாறு செயற்பட விடவும் மாட்டேன்.

பிரகீத் எக்னெலிகொட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு அதிகாரிகள் தவறு செய்திருந்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களைப் பிணையில் விடுவித்து வழக்கை நடத்துமாறும், அல்லது அவர்கள் தவறு செய்யாவிட்டால் விடுவிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தேன்.

முன்னர் இந்த விடயங்களை நான் பகிரங்கமாக பேசவில்லை. ஆனால் இப்போது அதுபற்றிப் பேச வேண்டியுள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.இந்த விடயம் தொடர்பான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தனியான சந்திப்பு ஒன்றிலும் அமைச்சரவையிலும் கேள்வி எழுப்பினேன்.

குற்றப்புலனாய்வுப் பிரிவு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு என்பன சில அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் கீழ் இயங்குகின்றன என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரிடம் கூறினேன்.

இந்த அமைப்புகள் அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்க முடியாது. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது.இதற்குப் பின்னால் நான் இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எவரையும் தடுத்து வைக்க வேண்டிய தேவையோ, தண்டிக்க வேண்டிய தேவையோ எனக்கு இல்லை.இதனை நான் உங்களுக்குக் கூறாவிட்டால், நான் குற்றம் சாட்டப்படுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

maith1.jpg2_.jpg4_

Related posts: