எல்லை தாண்டி இந்திய மீனவர்கள் அடாவடி – இரண்டு விசைப் படகுகளுடன் 21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

Tuesday, February 1st, 2022

தமிழக மீன்பிடி விசைப்படகுகளை நடுக்கடலில் வடமராட்சி மீனவர்கள் சுற்றிவளைத்ததால் பதற்றம் ஏற்பட்டிருந்ததோடு இதன்போது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுடன் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை நாகை மாவட்டம் வேதாரண்யம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 400 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.

மீனவர்கள் நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது யாழ்பாணம் மாவட்டம் கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் கைது செய்து மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை கடந்த 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் – வடமராட்சியில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகின்  மீது தமிழக மீனவர்களின் மீன்பிடி விசைப்படகு மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கி படகில் இருந்த இலங்கை மீனவர் மாயமானதாக இலங்கை மீனவர்கள் தரப்பில் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் படகு மூழ்கி மாயமான இரண்டு மீனவர்கள் சடலமாக நேற்று மாலை கரை ஒதுங்கினர்.

அதனை தொடர்ந்து நேற்று இரவு யாழ்ப்பாண மீனவர்கள் தங்களது பைபர் படகுகளில்  கடலுக்குள் சென்று எல்லை தாண்டி வந்துள்ள தமிழக மீனவர்கள் படகுகளை சுற்றி வளைத்து சிறை பிடிக்க படகுகளுடன் கடலுக்குள் சென்றனர்.

அப்போது  வடமராட்சி கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு படகையும் அதிலிருந்த 21 மீனவர்களையும்  இலங்கை மீனவர்கள் சுற்றி வளைத்து சிறைபிடித்து மீனவர்களை கரைக்கு கொண்டு வர முயற்சி செய்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் இலங்கை மீனவர்களால் பிடிக்கப்பட்ட இரண்டு படகையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் கைது செய்து மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும் நடுக்கடலில் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் வந்த தமிழக படகை சுற்றிவளைக்கும் போது படகில் இருந்த தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதாக இலங்கை மீனவர்கள் குற்றசாட்டியுள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட 21 மீனவர்களையும் இரண்டு படகையும் இன்று யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு பின் பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாகவும் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

இதன் காரணமாக மருதங்கேணி பிரதேச செயலகத்தின் பணியாளர்கள் அலுவலகத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அத்துடன் யாழ்ப்பாணம் – பொலிகண்டி மீனவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

வீதியில் கூடாரங்களை அமைத்து படகுகள் மற்றும் வலைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குறித்த வீதி ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

போராட்டம் இடம்பெறும் இடத்தில் அதிகமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

அதேபோன்று இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழ்ப்பாணம் – பொலிகண்டி மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பருத்தித்துறை – பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்கள் வீதிகளின் குறுக்கே படகுகள் மற்றும் வலைகளை போட்டு தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: