எரிபொருள் விலை பாரியளவில் குறைப்பு – இடையூறு விழைவித்த 20 ஊழியர்களுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்துக்குள் நுழையத் தடை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Wednesday, March 29th, 2023

இன்று (29) நள்ளிரவுமுதல் எரிபொருள் விலை குறைவடையவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இன்று விசேட செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.

அத்துடன், 95 ஒக்டேன் பெற்றோல் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

மேலும் ஒட்டோ டீசல் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 325 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே சுப்பர் டீசல் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 465 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை 295 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை

இன்று (29) கடமைக்கு சமுகமளிக்காத 20 க்கும் மேற்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று காலை கொழும்பில் உள்ள அமைச்சில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இன்று பணிக்கு சமுகமளிக்காத 20 இற்கும் மேற்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கூட்டுத்தாபன வளாகத்திற்குள் நுழைய அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கக் குழுக்கள் நேற்றுமுதல் எரிபொருள் நிரப்புதல் மற்றும் விநியோகம் தொடர்பான நடவடிக்கைகளில் இருந்து தங்களை விலக்கிக் கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையம் ஆகிய இரு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் பட்சத்தில் அல்லது ஏனைய ஊழியர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தால் அவர்களை கட்டாய விடுமுறையில் அனுப்புமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

இதேவேளை, தடையற்ற எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ள அமைச்சர், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனவும் விநியோகம் வழமை போன்று தொடரும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: