எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை – அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
Tuesday, January 26th, 2021
எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2003 ஆம் ஆண்டு 26 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தை செல்லுபடியற்றதாக்கி புதிய சட்டத்தை தயாரிப்பதற்கு இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இந்நிலையில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதா என அமைச்சரவை முடிவை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல, அமைச்சரவையில் இந்த விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே எரிபொருள் விலையில் திருத்தம் செய்வதற்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவையில் முன்வைத்த யோசனையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை நிகராகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி தலைமையில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நேற்றையதினம் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதன்போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும் இந்த விலை திருத்தம் மூலம் மக்களை சிரமத்திற்குள்ளாக்க முடியாதென தெரிவித்திருந்த ஜனாதிபதி முடியும் என்றால் எரிபொருளுக்காக அறவிடப்படும் வரியை குறைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதா என ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 57 டொலர் வரை அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளுக்கும் 16 ரூபாய் நட்டம் ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


