எரிபொருள் பிரச்சினை தொடர்பில் சில உண்மைகள் மறைக்கப்படுகின்றதா ? – நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றச்சாட்டு!

Wednesday, August 10th, 2022

பெற்றோலிய கூட்டுத்தாபனமும் பெற்றோலிய அமைச்சரும் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் சில உண்மைகளை மறைக்கின்றனர் என்பது அவர்களின் நடத்தையில் இருந்து தெளிவாகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவில் வழங்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கூறுகின்ற போதிலும் அதனை வழங்க முடியுமா இல்லையா என்பதை அமைச்சர் ஆராயாமல் இருப்பது பிரச்சினையாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரின் கருத்தில் உண்மை உள்ளதா என்பதைக் கண்டறிய தணிக்கை நடத்தப்பட வேண்டும் என்றும், ஆனால் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் குறைந்துள்ள போதிலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் இருந்தும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் செல்வாக்கு காரணமாக அவர்கள் அதில் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதிகள், விவசாயிகள், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய மக்கள் போதியளவு எரிபொருள் கிடைக்காததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இதனிடையே, சர்வகட்சி அரசாங்கத்துக்காக அரசாங்கம் செயற்படுகின்ற போதிலும் அவ்வாறானதொரு அரசாங்கத்தை அமைக்க அவர்கள் தயாரில்லை என்பது அவர்களின் செயற்பாடுகள் மூலம் தெரிகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: