எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் அரச பணியாளர்களின் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட வேண்டும் – அரச நிறுவனங்களிடம் பொது நிர்வாக அமைச்சு வலியுறுத்து!
Monday, June 27th, 2022
அலுவலகங்களுக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் சுற்றறிக்கை நீடித்து பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி நிறுவனங்களுக்குத் தேவையான குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்பாடுகளைத் தொடருமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், உத்தியோகத்தர்களை முடிந்தவரை வீட்டிலேயே இருக்க அனுமதிக்குமாறும், அவர்களின் சேவைகளை ஒன்லைனில் பெறுவதற்கு முன்னுரிமை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாளாந்த போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுடன் நேரடிதொடர்புடைய ஊழியர்களை அழைப்பது தொடர்பான தீர்மானங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாணச் செயலாளர்களின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையுடன் எடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த காலகட்டத்தில் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் அரச பணியாளர்களின் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட வேண்டும், மேலும் அனைத்து சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் ஒன்லைனில் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த நடவடிக்கை அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்து செல்வதற்கு இடையூறாக இருக்கக்கூடாது என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
000
Related posts:
|
|
|


