எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு – இலங்கைக்கு விரையும் நான்கு கப்பல்கள் – IOC யிடமிருந்து 7 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்யவும் தீர்மானம்!

Thursday, June 30th, 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்தியாவில் இருந்து இரண்டு டீசல் கப்பல்களும், இரண்டு பெட்ரோல் கப்பல்களும் ஜூலை மாதம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நான்கு எரிபொருள் கப்பல்களையும் இலங்கைக்கு கொண்டு வருவது குறித்து இலங்கை மற்றும் இந்திய அரசுகள் கலந்துரையாடி வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை  LIOC நிறுவனத்திடம் இருந்து 7  ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கான பணப்பரிமாற்றமும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் குறித்த டீசல் இருப்புக்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எரிபொருள் விநியோகத்தை முப்படை, காவல்துறை மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) நேற்று (29) தீர்மானித்துள்ளது.

இந்த சமீபத்திய நடவடிக்கை தொடர்பாக பாதுகாப்புப் படையினருக்கு விளக்கமளித்ததாகவும், இந்த நடைமுறை இன்று (30) முதல் நடைமுறைக்கு வரும் எனவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த சமீபத்திய உத்தரவின்படி, மறு அறிவிப்பு வரும் வரை எந்த இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைக்கப்பட்ட நிரப்பு நிலையத்திலிருந்தும் எரிபொருள் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்கான தங்கள் அடையாளத்தை நிரூபித்த பின்னர் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருளைப் பெற முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: