எரிபொருள் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவரும் எதிர்பார்ப்புடன் ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம் உதவி கோரினார் அரச தலைவர் கோட்டபய ராஜபக்ச!

Thursday, July 7th, 2022

நாட்டிலேற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவரும் எதிர்பார்ப்புடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடலொன்றை மேற்கொண்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக ஜனாதிபதி டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த கால சவால்களை சமாளிக்க ரஷ்ய அரசாங்கம் வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் நன்றி தெரிவித்த அதேவேளை, தற்போதைய பொருளாதார சவால்களை தோற்கடிப்பதற்காக இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய கடன் ஆதரவை கோரியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு ஏரோஃப்ளொட் விமான சேவையை மீண்டும் தொடங்குமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் இந்த உரையாடலின் போது, சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது அவசியம் என ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப தன்னால் முடியும் எனவும் அதில் தான் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அல்ஜசீரா அலைவரிசையுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதாரம் நிலையான, ஸ்திர நிலைக்கு திரும்ப இன்னும் 18 மாதங்கள் ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: