எமது மாவட்டத்தில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பின்றிய நிலையில் காணப்படுகின்றனர் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்!

எமது மாவட்டத்தில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் வேலை வாய்ப்பின்றிய நிலையில் காணப்படுகின்றனர். யாழ். மாவட்டத்தில் யுத்த காலகட்டத்திற்கு முன்னர் இயங்கிய பல தொழிற்சாலைகள் மீள ஆரம்பிக்கப்படவில்லை. இதன் காரணமாக வேலை வாய்ப்பில்லாத பிரச்சினை என்பது மிக முக்கியமானதொன்றாகக் காணப்படுகிறது. சுயதொழில் வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமும், பயிற்சிகள் வழங்குவதன் மூலமும் இதற்கான குறிப்பிடத்தக்க தீர்வுகளை எட்ட முடியும். இதற்கு ஒன்றிணைந்த செயற்பாடு அவசியமானது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணக் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதேச மட்ட மகளிர் அபிவிருத்தி நிலையங்களின் ஆடை வடிவமைத்தல், அழகுக் கலை மற்றும் மனைப் பொருளியல் கற்கை நெறிகளின் மாவட்ட மட்டக் கண்காட்சி நேற்று (28) கரவெட்டிப் பிரதேச செயலகம் அருகாமையில் அமைந்துள்ள மூத்த விநாயகர் கோவில் மண்டபத்தில் யாழ்ப்பாண மாவட்டக் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் நா. பஞ்சலிங்கம் தலைமையில் இடம்பெற்றது .
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கைப்பணிப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு என்பது மிகவும் குறைவாகவிருந்தது. ஆனால், தற்போது வெளிநாட்டிருந்து வருகை துயரும் உல்லாசப் பயணிகளும், புலம்பெயர்ந்து வாழும் எமது நாட்டைச் சேர்ந்த மக்களும் உள்ளூர்க் கைப்பணிப் பொருட்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். எனினும், எமது மாவட்டத்தின் கைத் தொழிற் பொருட்களின் உற்பத்தித் தரத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். பொருட்களைக் கவர்ச்சியான வகையில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதன் மூலம் சந்தை வாய்ப்புக்களை மேலும் அதிகரிக்க முடியும் என்றார்.
Related posts:
|
|