எமது கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்  – யாழ்.அரச அதிபர் வலியுறுத்து!

Thursday, October 20th, 2016

கடந்த கால இடப்பெயர்வுகளின் மூலம் எமது பாரம்பரிய கலாச்சாரங்கள் அனைத்தும் மாறிப்போயுள்ளன. அவை அனைத்தும் படிப்படியாக மாற்றப்பட்டு எமது கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

மூத்த பிரஜைகளுக்கான தேசிய கொள்கையினை தயாரிப்பதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மூத்த பிரஜைகளை மதிக்கும் பழக்கவழக்கங்கள் எம்மிடையே அருகி வருகின்றன. கடந்த கால இடப்பெயர்வுகளின் மூலம் எமது அனைத்து செயற்பாடுகளும், கலாசாரமும் மாறிவிட்டது. மற்றவர்களை மதிக்கும் பண்பு எமக்கு வேண்டும். அதை படிப்படியாக பழக வேண்டும். மதிக்கும் பழக்கவழக்கங்கள் குடும்பத்தில் இருந்துதான் வரவேண்டும். ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் பெற்றோர்கள் சொல்லிக் கொடுப்பதன் படிதான் பிள்ளைகள் நடப்பார்கள். எம்மிடையே மாற்றம் வேண்டும். மூத்த பிரஜைகள் தமக்கான கோரிக்கைகள் பலதை முன்வைத்திருந்தனர். அதன்படி பிரதேச ரீதியாக பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுவது, மாதாந்த கொடுப்பனவாக 2000ரூபாய் வழங்குவது தொடர்பாகவும் மூத்த பிரஜைகளுக்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டையை சரியான முறையில் பயன்படுத்துவது தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்தப்படும். அறிவால் செயற்படுத்தும் காரியங்களை விட அனுபவம்தான் உடனடியாக கூடுதலான பலனை அளிக்கும். அந்த வகையில் மிக முக்கியமாக மூத்தோரின் கோரிக்கைகள் உள்வாங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுப்போம். தொடர்ச்சியாக மூத்தோரிடையே கலந்துரையாடல்களை மேற்கொண்டால் நடவடிக்கைகளின் முன்னேற்றங்களை அறிந்து கொள்வதற்கு அது உதவியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

14740987_781061382032946_794375956_n

Related posts: