“எமக்கான வெற்றி தூரமில்லை” – விளையாட்டுதுரை அமைச்சர் தயாசிறி ஜயசேகர!
 Monday, October 3rd, 2016
        
                    Monday, October 3rd, 2016
            எமக்கான வெற்றி தூரமில்லை என 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் உரையாற்றிய விளையாட்டுதுரை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்- விளையாட்டு அமைச்சு உருவாக்கப்பட்டு 49 வருடங்கள் ஆகின்றன. இவ்வமைச்சு உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரையிலும் தேசிய விளையாட்டொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதில்லை. அவ்வாறிருக்கையில் இன்று நிறைவு பெறும் தேசிய விளையாட்டு விழா வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. இவ் வெற்றிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்களிப்பு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இது இந் நாட்டில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றமாகும். இந்த மாற்றத்தைக் கொண்டு பல விடயங்களை எம்மால் சாதிக்க முடியும்.
இந்த தேசிய விளையாட்டு போட்டியில் வடமாகாணத்திலிருந்து பல விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். உயரம் பாய்தலில் எதிர்வீரசிங்கம், கரப்பந்நு வீரர் தர்மலிங்கம், கூடைப்பந்தில் வெற்றியீட்டிய சிவலிங்கம் போன்றோர் நாட்டின் கீர்த்திக்காக பாடுபட்டவர்கள். 17 வயதிலேயே எதிர்வீரசிங்கம் உயரம் பாய்தலில் வெற்றியீட்டி, ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றார். கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் தெற்கில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப்போட்டியில் எவ்வித குறையுமில்லாமல் வடக்கிலும் இப்போட்டியை நடத்த முடிந்தமை மிகவும் சந்தோஷமளிக்கின்றது.
பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் வடமாகாண பெண்கள் வெற்றியீட்டிக்கொண்டனர். மேலும் தேசிய ரீதியில் கடும் சவாலுக்கு மத்தியில் வெற்றியீட்டிக்கொண்ட மெய்வல்லுனர் விளையாட்டு வீராங்கனை அனிதா தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டமைக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இதுவே நாம் ஆரம்பித்த மாற்றமாகும் என்றார்.

Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        