எதிர்வரும் 11 ஆம் திகதியன்று ஜனாதிபதி தலைமையில் கொரோனா ஒழிப்பு செயலணியின் முக்கிய கூட்டம் !

Monday, June 7th, 2021

நாட்டில் தற்போது கொரேனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் நாளாந்தம் அதிகரித்துச் செல்வதனால் நோயை கட்டுப்படுத்துவதற்காக பயண கட்டுப்பாட்டினை மேலும் ஒருவாரகாலம் நீடிக்குமாறு இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் பயண கட்டுப்பாடு விதிப்பதன் மூலம் ஓரளவு நோயை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக தெரிவித்துள்ள எனவும் தெரிவித்துள்ள இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தற்போதைய நிலைமையில் நாட்டை திறந்தால் கடுமையான ஆபத்தான நிலைமை ஏற்பட கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

அதேநெரம் நாட்டை திறக்க நேரிட்டால் சுகாதார கட்டமைப்பு சீர்குலையும் அச்சுறுத்தல்கள் உள்ளதாக  குறித்த சங்கத்தின் விசேட வைத்தியர் பத்மான குணரத்ன தெரிவித்துள்ளார். இதனால் தற்போதைய நிலைமையில் பயண கட்டுப்பாட்டினை நீடிக்குமாறு அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே தற்போது உள்ள பயண கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதென்றால் ஒரு மாதமேனும் நாட்டை முடக்க வேண்டும் அல்லது பயண கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு கடந்த மாதம் அறிவித்தது.

தற்போதைய நிலைமையை ஆராய்ந்து எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் உள்ள கொரோனா தடுப்பு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்றும் அதனடிப்படையில் 11 ஆம் திகதியன்று முக்கிய தீர்மானத்தை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்கவுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

தற்போது நாட்டில் கொரோனான பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 14 ஆம் திகதியும் நடமாட்டக் கட்டுப்பாட்டை தளர்த்த முடியாது என்று, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் அமுலில் இருக்கின்ற போதும், மக்களது நடமாட்டத்தை கணிசமாக கட்டுப்படுத்த முடியாத நிலைமை நிலவுகிறது. நடமாட்டக் கட்டுப்பாட்டின் மூலம் 90 சதவீதமான நடமாட்டத்தை கட்டுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஷ்ட வசமாக அது சாத்தியமற்றுள்ளது.

குறிப்பாக கொழும்பு நகரில் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அத்தியாவசிய துறையைப் போன்று இயக்கப்படுகின்றன. பணியாளர்கள் நாளாந்தம் தங்களது பணிகளுக்கு செல்வதால், கொழும்பு நகரம் தொடர்ந்தும் சனநடமாட்டம் உள்ள இடமாகவே இருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில், அடுத்தவாரமும் நடமாட்டத் தடையை நீக்க முடியாத நிலைமையே நிலவுகிறது என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு இன்றையதினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் –

பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இன்று காலைவரையில் எவ்வித அறிவுறுத்தலும் வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே 14 ஆம் திகதிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் தேவை ஏற்படின் பயணத் தடையை நடைமுறைப்படுத்த முடியும் எனவும்  அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: