எதிர்வரும் 10 நாட்களுக்குள் எரிவாயு தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு – லிட்ரோ நிறுவன தலைவர் தெஷார ஜயசிங்க அறிவிப்பு!

Thursday, March 24th, 2022

லிட்ரோ நிறுவனம் தற்போது தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை மேற்கொண்டு வருவதாக அதன் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் எரிவாயு தாங்கிய மேலும் 2 கப்பல்கள் நாளை மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய எதிர்வரும் 10 நாட்களுக்குள் ஒரு மில்லியன் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு நீங்கி, எரிவாயு கொள்வனவுக்கான நீண்ட வரிசை இல்லாமல் செய்யப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

நாட்டின் நாளாந்த தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பொதுவாக, 80 ஆயிரம்முதல் ஒரு இலட்சம் வரையிலான எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க வேண்டிய தேவை உள்ளது.

எனினும், எரிவாயு கிடைக்கப்பெறாமையின் காரணமாக, தொடர்ந்து எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள முடியாமல், சந்தையில் பெரும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், இதனால் பொதுமக்களின் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, உள்ளூர் எரிவாயு சந்தையில் சுமார் 20 சதவீதம் எரிவாயு விநியோகம் செய்யும் லாஃப் கேஸ் நிறுவனமானது, டொலர்கள் இல்லாத காரணத்தால் கடந்த 4 மாதங்களாக சந்தையில் எரிவாயு விநியோகத்தை தவிர்த்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: