எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விசாரணை நிறைவடையவில்லை – சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றுக்கு அறிவிப்பு!

Saturday, August 7th, 2021

தீக்கிரையான எம்.வி எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் இன்னும் நிறைவு பெறவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் திணைக்களம் இவ்வாறு அறியப்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை, வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் அரச இராயண பகுப்பாய்வு திணைக்களம் என்பன இணைந்து அது தொடர்பான விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துவருவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டை கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டிருந்த நிலையில், அதன் நிறுவனம், அதற்கான இழப்பீட்டினை வழங்கியதன் பின்னர் கப்பலை விடுவித்திருந்ததாக எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பல் சார்பில் முன்னிலையான சட்டவாதிகள் தெரிவித்திருந்ததுடன் அவ்வாறானதொரு சலுகையினை தமது தரப்பினருக்கும் வழங்குமாறு நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விடயங்களை ஆராய்ந்த நீதிபதி தமின் தொடவத்த, விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என்பதால், அதனை உடனடியாக நிறைவு செய்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி நீதிமன்றுக்கு அறிக்கையிடுமாறு குறித்த நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: