எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – நட்டஈட்டைப் பெற சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றத்தில் வழக்கு – அமைச்சரவை பத்திரம் ஒன்றையும் தயாரிக்குமாறு ஜனாதிபதி நீதி அமைச்சருக்கு பணிப்பு!

Saturday, November 5th, 2022

தொடரவுள்ள வழக்கு குறித்து எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கம்பனியிடம் நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த கப்பல் நிறுவனத்திற்கு எதிராக சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு தீப்பிடித்து எரிந்த எம்.வீ. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவுக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று கடந்த முதலாம் திகதி இடம்பெற்றுள்ளது.

அந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த கப்பல் நிறுவனத்திடமிருந்து நட்டஈட்டைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி நீதியமைச்சரிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ அனர்த்தத்திற்குள்ளான போது ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடு கோரி சிலர் உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

மேற்படி நிறுவனத்திற்கு எதிராக சர்வதேச நடுவர் மன்றத்தில் வழக்கு தொடுப்பது தொடர்பில் சட்டமா அதிபர் சஞ்ஜய் இராஜரத்தினமும் அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஆளணி பிரதானி சாகல ரத்நாயக்க ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல் நிறுவனத்திடமிருந்து கோரப்படும் நட்டஈட்டு தொகையை குறிப்பிட்டு சிங்கப்பூரிலுள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி நீதியமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கிணங்க அடுத்துவரும் அமைச்சரவைக் கூட்டத்தின்போது அந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: