ஊழல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைக்காக விசேட பொலிஸ் குழு!

Friday, February 22nd, 2019

கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆரம்பகட்ட விசாரணை நடவடிக்கைக்காக விசேட பொலிஸ் குழுவொன்றை நியமிக்குமாறு, பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட திறமைகளுடன் கூடிய அதிகாரிகள் குழுவொன்றை நியமிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக, குறித்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த குழு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் நியமிக்கப்படவுள்ளது.

கடந்த ஜனவரி 29 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த ஆணைக்குழுவுக்கு 101 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த முறைப்பாடுகளை பரிசீலனைக்குட்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் அதிகமானவை, ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு பொருத்தமற்றவை என அதன் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் முறைகேடுகள், நம்பிக்கையை சீர்குலைத்தமை, சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை, ஏமாற்றியமை, அதிகாரம், அரச சொத்துக்கள் மற்றும் சலுகைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை, அரச சொத்துக்கள் மற்றும் வருமானங்களுக்கு பாரிய சேதம் விளைவித்தமை தொடர்பிலான உண்மைத்தன்மையை கண்டறிவதே ஆணைக்குழுவின் பிரதான நடவடிக்கையாகும்.

இது தொடர்பில் எழுத்துமூலமான முறைப்பாடுகள் அல்லது தகவல்களை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளிலும், செயலாளர், அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, அறை எண் 210, ப்ளொக் 02, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம், பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு – 7 என விலாசத்திற்கு அனுப்பமுடியும்.

மேலும் 0112 66 53 82 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை வழங்க முடியும்.

இதேவேளை, முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: