ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மே முதல் வாரத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் – நீதி அமைச்சர் அறிவிப்பு!

Sunday, April 9th, 2023

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மே மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். இந்த சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டில் ஊழல் மோசடிகள் தீவிரமடைந்த காரணத்தினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. ஊழல் ஒழிப்புக்காக நடைமுறையில் உள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் செயற்பாடுகள் துரிதரகரமாக இல்லை,அதற்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.

மோசடி செய்யப்பட்ட அரச சொத்துக்கள் அரசுடமையாக்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. தேசிய மட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் சர்வதேச மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த பிரதான நிபந்தனைகளில் ஊழல் ஒழிப்பு விவகாரம் முன்னிலை வகிக்கிறது.2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஊழல் ஒழிப்பை இல்லாதொழிப்பதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம்.ஊழல் ஒழிப்பு தொடர்பான  சட்டமூல வரைபு தயாரித்தல் பணிகள் 2015 ஆம் ஆண்டு ஆரம்பமாகி,2018 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.

பல்வேறு காரணிகளினால் நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை இயற்ற முடியாமல் போனது.காலம் கடந்த நிலையில் நாட்டின் தேவைக்காக ஊழல் எதிர்ப்பு சட்டத்தை உருவாக்கும் சிறந்த பொது மற்றும் அரசியல் சூழல் தோற்றம் பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான சமவாயங்கள் ,ஊழலுக்கு எதிரான சர்வதேச நியமங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு புதிய ஊழல் எதி;ர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.ஊழல் ஒழிப்பு தொடர்பில் காலி முகத்திடல் போராட்டகளத்தில் முன்வைக்கப்பட்ட சகல கோரிக்கைகளும் இந்த சட்டமூல வரைபில் உள்வாங்கப்பட்டுள்ளன.

ஊழல் ஒழிப்பு செயற்பாடுகளை  அதிகாரப்பூர்வமாகவும்,வினைத்திறனான முறையிலும் முன்னெடுக்கும் வகையில் ‘இலஞ்சம் அல்லது ஊழலுக்கு எதிரான விடயங்களை ஆராய்வதற்கான ஆணைக்குழு’ஒன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூல வரைபு எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். ஊழல் ஒழிப்பு தொடர்பில் கருத்துரைக்கும் மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தியினர் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: