இலங்கையில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோயாளிகள் – பாடசாலை மாணவர்கள் உட்பட 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் கணிசமான அளவு பதிவாகியுள்ளதாக தகவல்!

Thursday, November 23rd, 2023

நாட்டில் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் பதிவான எய்ட்ஸ் நோயாளிகளில் பாடசாலை மாணவர்கள் உட்பட 15-24 வயதுக்குட்பட்டவர்கள் கணிசமான அளவு உள்ளதாக தெரியவந்துள்ளது.

எயிட்ஸ் மற்றும் பாலுறவுத் திட்டத்தின்படி, இவ்வருடம் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் 485 புதிய எய்ட்ஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்நிலை தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என எயிட்ஸ் திட்டத்தின் பணிப்பாளர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டளவில் 95 வீதமான எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களைக் கண்டறிய வேண்டிய நிலையில் 2022ஆம் ஆண்டளவில் 86 வீதமானவர்களைக் கண்டறிய முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

” எய்ட்ஸ் நோய் தொற்றாளர் ஒருவருக்கு இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த பல வகையான மருந்துகளுக்கு பதிலாக, தற்போது ஒரே மருந்தில் அந்த வகைகளை சேர்க்கும் வகையில் ஒரு மருந்து உருவாக்கப்பட்டுள்ளதால், நோயாளிகளுக்கு பயன்படுத்த மிகவும் எளிதாக உள்ளது.

வைத்தியரின் பரிந்துரைகளின் அடிப்படையில் தினசரி மருந்தை உட்கொள்ள வேண்டும் . அவ்வாறு செயல்படின், இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் 0.001 என்ற இலக்கை எட்டலாம்.

இதேநேரம் ஆபத்தான பாலுறவில் ஈடுபடுபவர்கள் உடனடியாக இரத்தப் பரிசோதனைக்கு செல்ல வேண்டும்.

எய்ட்ஸ் நோயாளிகளுக்கான அனைத்து பரிசோதனைகள் மற்றும் மருந்து சிகிச்சைகளை அரசாங்கம் இலவசமாக வழங்குவதால், ஆபத்தான உடலுறவில் ஈடுபடும் நபர்கள் உடனடியாக முன்வர வேண்டும் என்றும், அவர்களின் இரகசியத்தன்மையை பாதுகாக்க சுகாதார ஊழியர்கள் கடமைப்பட்டுள்ளனர் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: