ஊர்காவற்றுறை கர்ப்பிணி கொலை வழக்கை திசை திருப்ப முயற்சிகள்!

Tuesday, May 23rd, 2017

ஊர்காவற்றுறை கர்ப்பிணி பெண் படுகொலை தொடர்பான வழக்கினை திசை திருப்புவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக விரிவான விசாரணைகளை நடத்துமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஊர்காவற்றுறை கரம்பொன் எனும் பிரதேசத்தில் வீட்டில் தனித்திருந்த ஏழு மாத கர்ப்பிணி பெண் மற்றும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை ஆகியோர் இனந்தெரியாதோரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இவ் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளினூடாக இருவர் இக் கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் வழக்கு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றது. இவ் வழக்கு நடவடிக்கையானது நேற்றைய தினம் இடம்பெற்றபோது மன்றில் முன்னிலையான கொல்லப்பட்ட பெண்ணின் சார்பான சட்டத்தரணி சுகாஸ் குறித்த வழக்கில் சந்தேகநபர்கள் தரப்பு சட்டத்தரணியால் குறித்த இரண்டு பேரும் சம்பவம் இடம்பெறும் போது மருதனார்மடம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்ததாக கூறி அதற்கான ஆதாரமாக அவ் எரிபொருள் நிரப்பு நிலைய பாதுகாப்பு கமரா வீடியோ பதிவு உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பொலிஸாரால் பெற்றுக் கொள்ளப்பட்ட குறித்த வீடியோ கமரா ஒளிப்பட பதிவின் ஆய்வறிக்கை இன்னமும் மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை மன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.  மேலும் குறித்த வழக்கில் கண்கண்ட சாட்சியான வாய்பேச முடியாத சிறுவனை இவ் வழக்கு தொடர்பில் சாட்சியமளிக்க கூடாது எனவும் அதற்காக பணம் தருவதாகவும் சிறைச்சாலையில் உள்ள நபர் ஒருவர் தம்மிடம் கூறியதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.  ஆனால் குறித்த பேரம் பேசும் விடயம் இடம்பெற்றதாக கூறப்படும் காலப்பகுதியில் குறித்த நபர் சிறைச்சாலையில் இருந்திருக்கவில்லை.

அவர் இவ் பேரம் பேசும் விடயம் கூறப்பட்டதாக கூறப்படும் காலத்திற்கு பின்னரே யாழ்.மேல் நீதிமன்றால் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறை சென்றிருந்தார்.  இவ்வாறான நிலையில் குறித்த வழக்கில்  சிறையில் இருந்தவர் பேரம் பேசியதாக கூறும் விடயங்களை அவதானிக்கின்ற போது இது இவ் வழக்கை திசை மாற்றுவதற்கான முயற்சிகள் நடக்கின்றதா? என்ற சந்தேகம் உள்ளதாக சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார். இவற்றைத் தொடர்ந்து குறித்த சட்டத் தரணியின் விடயம் தொடர்பிலும் விரிவான விசாரணையை நடத்துமாறும் பொலிஸாருக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டதுடன் குறித்த இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

Related posts: