உள்ளூர் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்படாது – அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு!

Saturday, January 15th, 2022

தேங்காய் எண்ணெய் விலையில் அதிகரிப்பு ஏற்படும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் விடுத்துள்ள அறிக்கையை அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் வன்மையாக மறுத்துள்ளது.

அத்துடன் அதீத இலாபத்தை எதிர்பார்த்து இவ்வாறான அறிக்கைகள் வெளியிடப்படுவதாக சங்கத்தின் ஒருங்கிணைப்பாளாரான புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தேங்காய் அபிவிருத்திச் சபையுடன் இணைந்து சந்தையில் செயற்கையான விலையை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழமையான விலையை தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் உள்ளூர் உற்பத்தியாளர்களால் விலை அதிகரிப்பு எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

உள்ளூர் பன்னாட்டு நிறுவனங்கள் அதிக இலாப வரம்புகளை இலக்காகக் கொண்டு விலை அதிகரிப்பின் பின்னணியில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், வழமையான வருடாந்த தேங்காய் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 1.9 பில்லியன் தேங்காய்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.

எனவே, தற்போதைய தேங்காய் தட்டுப்பாட்டைத் திறமையாகக் கையாள அரசாங்கம் தவறினால் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயின் விலை அதிவேகமாக அதிகரிக்கும் எனவும் அவ்வியக்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: