உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து – ஐ.நா. புள்ளிவிபர ஆய்வில் தகவல்!

Friday, March 22nd, 2019

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்தும் முதலிடத்திலும் இந்தியா 140 ஆவது இடத்திலும் உள்ளதாக ஐ.நாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதியை உலக மகிழ்ச்சி தினமாக ஐ.நா அறிவித்தது. அதிலிருந்து ஆண்டுதோறும் மகிழ்ச்சியான உலக நாடுகள் பட்டியலை  ஐ.நா வெளியிட்டு வருகின்றது. அதன்படி 2019 ஆம் ஆண்டிற்கான உலகத்தின் மகிழ்ச்சி நாடுகள் அறிக்கையை ஐ.நா வெளியிட்டது. அதில் உலகிலேயே மகிழ்ச்சியான நாடாக கடந்த வருடத்தை போல இந்த வருடமும் பின்லாந்து தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

முதல் 10 மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் டென்மார்க், நோர்வே, ஐஸ்லாந்து, சுவிற்ஸர்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் உள்ளன. உலக நாடுகளின் வருமானம், சுதந்திரம், நம்பிக்கை, ஆரோக்கிய வாழ்க்கை, சமூக ஆதரவு, மக்களின் இரக்க குணம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு 133 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 140 ஆவது இடத்தில் உள்ளது. உலகின் பணக்கார நாடாக கருதப்படும் அமெரிக்கா இதில் 19 ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 67 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 125 ஆவது இடத்திலும் உள்ளது. சீனா 93 ஆவது இடத்தை பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் 154 ஆவது இடத்தில் உள்ளது. தன்சானியா 153 ஆவது இடத்திலும், மத்திய ஆபிரிக்கக்குடியரசு 155 ஆவது இடத்திலும் உள்ளன. ருவண்டா 152 ஆவது இடத்தைப்பெற்றுள்ளது.  

Related posts: