உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருங்கிய நட்புறவை பேணுவதே தமது நோக்கம் – ஜனாதிபதி!
Saturday, June 15th, 2019
இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில், உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருங்கிய நட்புறவை பேணுவது, தமது நோக்கமாகும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமலி ரஹ்மொன்னுடன்னான சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய 5ஆவது மாநாட்டில் பங்குபற்றுவதற்காக, தஜிகிஸ்தான் சென்றுள்ள ஜனாதிபதி, தனது விஜயத்தின் முதலாவது நடவடிக்கையாக, தஜிகிஸ்தான் ஜனாதிபதியை துஷன்பேயிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார். இரு தலைவர்களுக்குமிடையிலான சுமுகமான கலந்துரையாடலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
இதன்போது பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் முறையான திட்டமொன்றின் ஊடாக இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும் தலைவர்கள் கலந்துரையாடினர்.
மேலும் இருநாடுகளுக்கிடையில் முதலீட்டு, வியாபார வாய்ப்புகளை கண்டறியும் துரித நிகழ்ச்சித்திட்டமொன்று பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. பிராந்திய பாதுகாப்பு தொடர்பிலும் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பது தொடர்பிலும் ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
|
|
|


