உலகத்துடனான எங்கள் கூட்டணிகளை மீண்டும் சரிசெய்வோம் – பதவியேற்றதும் உலக நாடுகளுக்கு பைடன் விடுத்துள்ள அறிவிப்பு!

Thursday, January 21st, 2021

உலகத்துடனான எங்கள் கூட்டணிகளை மீண்டும் சரிசெய்வோம். திருத்திக்கொள்வோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது பதவியேற்பு உரையில் உலக நாடுகளிற்கான செய்தியை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் –

எல்லைக்கு அப்பால் இருப்பவர்களிற்கான எனது செய்தி இது என தெரிவித்துள்ள அவர்  அமெரிக்கா சோதனைக்குள்ளாக்கப்பட்டு மீண்டும் வலுவானதாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் எங்கள் பலத்தின் மூலமாக மாத்திரம் தலைமை தாங்கப்போவதில்லை. மாறாக எங்கள் முன்னுதாரணம் மூலமாக தலைமை தாங்குவோம். அமைதி, முன்னேற்றம், பாதுகாப்பு ஆகிய விடயங்களில் நம்பகத்தன்மை மிக்க வலுவான சகாவாக நாங்கள் விளங்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க தேசம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரும் சவால்களை வெற்றி காண்பதற்கு மக்கள் ஒன்றுபடவேண்டும் என தெரிவித்துள்ளதுடன் இது அமெரிக்காவின் நாள், இது ஜனநாயகத்தின் நாள், வரலாற்றினதும் நம்பிக்கையினதும் நாள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா பாரிய சவாலில் இருந்து வெற்றிபெற்றுள்ளது, இன்று நாங்கள் ஒரு வேட்பாளரின் வெற்றியை கொண்டாடவில்லை. ஜனநாயகம் என்ற நோக்கம் வெற்றிபெற்றதை கொண்டாடுகிறோம். ஜனநாயகம் என்பது விலைமதிப்பற்றது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

இந்த புனிதமான பகுதியில் – சிலநாட்களிற்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைகள் நாடாளுமன்றத்தின் அடிப்படையையே ஆட்டக்காணசெய்தது.

இந்த புனிதமான பகுதியில் நாங்கள் ஒரு தேசமாக ஆண்டவனின் கீழ் பிளவுபடாமல் கடந்த இரண்டு நூற்றாண்டுகளைப் போல அமைதியான முறையில் அதிகாரத்தை கையளிப்பதற்காக ஒன்றிணைந்துள்ளோம்.

இன்று இந்த ஜனவரி நாளில் எனது முழு ஆன்மாவும் அமெரிக்காவை ஐக்கியப்படுத்துவது எங்கள் மக்களை ஐக்கியப்படுத்துவது தேசத்தை ஐக்கியப்படுத்துவது குறித்தே சிந்திக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: