உரிய தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை தயாரித்து நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல்!

Thursday, October 15th, 2020

தற்போது நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, உரிய தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் 5 பேரினால் இன்றையதினம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

தற்போதைய கொரோனா பரவல் நிலைமை காரணமாக ஆடைத் தொழிற்துறையில் பணியாற்றுபவர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக அந்த மனுவில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியான எவரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் கொரோனா பரவலானது தற்போது வரையில் சமூகத் தொற்றாகவில்லை என்பதை தாம் தெளிவாக கூறுவதாகவும் அமைச்சின் ஊடகப் பேச்சாளரான வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

எவருக்கும், உயிராபத்து ஏற்படாத வகையில் மினுவாங்கொடை கொத்தணியையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்ற இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 9 ஆயிரத்து 974 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் நாட்டில் இதுவரையில் 3 இலட்சத்து 48 ஆயிரத்து 909 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, விமானப்படையின் பளை தனிமைப்பத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 100 பேர், இன்று காலை அங்கிருந்து வீடு திரும்பியுள்ளனர் என விமானப்படையின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: