உரத்தை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் மானியம் தேவையற்றது என விவசாய அமைப்புகள் அறிவிக்குமாயின், நெற் கொள்வனவை மேற்கொள்ள முடியும் -விவசாய அமைச்சு அறிவிப்பு!

Saturday, September 23rd, 2023

பயிர்ச்செய்கைக்கு தேவையான உரத்தை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் மானியம் தேவையற்றது என விவசாய அமைப்புகள் அறிவிக்குமாயின், அந்த பணத்தின் மூலம் நெற் கொள்வனவை மேற்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை தேசிய கூட்டு விவசாயிகள் சங்கத்தினருக்கும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அரசாங்கம் வழங்குகின்ற உர மானியம் தேவையற்றது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு விரும்புவதாக குறித்த சங்கம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் பெரும்போகத்திற்கான உரங்களை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் ஏற்கனவே 12 ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வறட்சி, மழை மற்றும் படைப்புழு தாக்கத்தினால் இதுவரையில் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதுடன், பெரும்போகமும் தோல்வியடைந்தால், உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.  

இந்தநிலையில், நாட்டில் உள்ள அரிசி கையிருப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை போதுமானது என விவசாய அமைச்சு குறிப்பிட்டிருந்தது. எனவே எதிர்வரும் பெரும்போக அறுவடை மிக முக்கியமானது என விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: