உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணியில் அயல் நாடு – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்கியுள்ளதாக வெளியாகியுள்ளன செய்திகள்!
Sunday, March 31st, 2024
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலின் பின்னணியில் இந்தியாவே (India) செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) வாக்குமூலம் வழங்கியுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே அவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 2019 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போதே உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அண்மையில் கண்டிக்கு பயணம் செய்திருந்த அவர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் யார் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்திருந்தார்
அத்துடன், இது தொடர்பில் தாம் நீதிமன்றம் ஒன்றில் இரகசிய வாக்குமூலம் ஒன்றையே வழங்கமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், அதற்கு முன்னதாகவே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அவர் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. குறித்த வாக்குமூலத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பின்புலத்தில் இந்தியாவே செயற்பட்டதாக மைத்திரிபால கூறியுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அந்த தாக்குதல்களை தடுக்க தவறிய குற்றச்சாட்டுக்காக சிறிசேனவுக்கு உயர்நீதிமன்றம் பெருந்தொகை அபராதத்தையும் விதித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மாத்தளை விமான நிலையம் போன்ற திட்டங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படாமையினாலேயே உயிர்த்த ஞாயிறுதாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இந்தியாவின் ராஜதந்திரி ஒருவர் தம்மிடம் ஒப்புக்கொண்டதாக மைத்திரிபால வாக்குமூலம் வழங்கியுள்ளாரென குறித்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
ஆரம்பம் முதலே இலங்கையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக இந்திய புலனாய்வுப்பிரிவே இலங்கைப் புலனாய்வுப்பிரிவுக்கு தகவல் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதேநேரம், தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளே இதற்கு காரணம் எனவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் மைத்திரிபால குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு வழங்கப்படும் தெளிவுத் தன்மையற்ற வாக்குமூலங்களுக்கு மத்தியிலேயே மாளிகாகந்த நீதிமன்றம் மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 4ஆம் திகதி வாக்குமூலம் வழங்குவதற்கதக அழைப்பு விடுத்துள்ளது.
அதேவேளை, மைத்திரிபால வழங்கும் வாக்குமூலத்தின் மூலம் உண்மை தன்மையை வெளி கொண்டு வர முடியும் எனவும் இது தொடர்பில் இந்திய அரசாங்கம் பதில் வழங்கவும் வாய்ப்புக்கள் உள்ளன என செய்தித்தாள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


