உயர் நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்ததும் 70 நாள்களுக்குள் பொதுத் தேர்தல் – தேர்தல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவிப்பு!

Saturday, May 23rd, 2020

உயர் நீதிமன்றத்தில் பரீசீலிக்கப்படும் அடிப்படை உரிமை மனுக்கள் மீதான கட்டளை வழங்கப்பட்ட பின்னர் பொதுத் தேர்தலுக்கான புதிய திகதி முடிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, உயர் நீதிமன்றின் கட்டளை வழங்கப்பட்ட நாளிலிருந்து 70 நாள்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பொதுத் தேர்தல் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து சுகாதார அதிகாரிகளுடன் மேலதிக கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் கடமையில் உள்ள அனைத்து அதிகாரிகளின் பாதுகாப்பிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேர்தல் கடமைக்கு அமர்த்தப்படும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதோடு, தேர்தலுக்கான செலவும் அதிகமாகும் என்றும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளம் நாயகம் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்குட்படுத்தும் அடிப்படை உரிமை மனுக்கள் மீதான கட்டளையை உயர் நீதிமன்றம் அடுத்த வாரம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: