உதவித்திட்டங்கள் வழங்கப்படும்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Friday, July 13th, 2018

எதிர்வரும் காலங்களில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற சிறுவர்கள், போராளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களிற்கு விசேட உதவித்திட்டங்கள் வழங்கப்படுவதுடன் அரச தொழில் வாய்ப்புக்களில் மேற்குறிப்பிட்ட வகையினருக்கு சட்ட ரீதியான இட ஒதுக்கீடு செய்யப்படல் வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன் வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்திற்கான புதிய கட்டட திறப்பு விழா நிகழ்வில் கெளரவ விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் வடமாகாணத்தில் வழங்கபடுகின்ற வேலை வாய்ப்புக்களில் மூன்று வீதம் மாற்றுத்திறனாளிகள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், அது குறைந்தது பத்து வீதமாக அதிகரிக்கப்பட்டு அவற்றுள் போராளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் என்போருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்று வடக்கு மாகாணசபையிடம் கோரிக்கை விடுத்தார்.

நாற்பத்தி இரண்டு இலட்சம் ரூபா (4,200,000/=) செலவில் கட்டப்பட்ட குறித்த புதிய கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளுக்காக தமது அபிவிருத்தி நிதியில் இருந்து இருபது இலட்சம் ரூபாவினை மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: