உண்மைகளை தெரியப்படுத்துங்கள் – கடன் நீடிப்பு தொடர்பில் மக்களை தெளிவூட்டும் சிறப்புப் பணி வர்த்தக, தொழிற்சங்க குழுவினரை சாரும் என ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, July 1st, 2023

கடன் நீடிப்பு தொடர்பில் மக்களை தெளிவூட்டும் சிறப்புப் பணி வர்த்தக, தொழிற்சங்க குழுவினரை சார்ந்துள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடன் நீடிப்பு முறைமைகள் பற்றிய உண்மைகளை கூறுவதால் இந்நாட்டின் தொழிற்படையினர், பொதுமக்கள் மத்தியில் காணப்படும் அச்சத்தைப் போக்க முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்

வணிக சபையின் உறுப்பினர்கள், வர்த்தகர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை ஜனாதிபதி அலுவலகத்தில்  சந்தித்து கலந்துரையாடியிருந்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வணிக சபையின் உறுப்பினர்கள், வர்த்தகர்கள் ஆகியோருடனான சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி, கடன்  நீடிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வட்டி வீதங்கள் குறைவடைவதால்  நிதிசார் நடவடிக்கைகளினால்  பாதிப்புக்களை எதிர்கொண்டவர்களுக்கு நிவாரணம் கிட்டும் என்றும் தெரிவித்துள்ளார்..

மேலும் வட்டி வீதம் குறைவடையும் காலத்தை உறுதியாக குறிப்பிட முடியாத போதிலும், சில மாதங்களுக்குள் வட்டி வீதங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடையும் என நிபுணர்கள் கணித்துள்ளனர் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதனையடுத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடன் நீடிப்பை  செய்யத் தவறும் பட்சத்தில் சிறிய வியாபாரங்களுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதங்கள் மீண்டும் பெருமளவில் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டினார்.

அதேபோல் டொலர் வலுவடைந்து காணப்படும் இதுபோன்ற நேரங்களில் டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்தால் நிலைமை பாரதூரமாகிவிடும் என தெரிவித்த ஜனாதிபதி, வெளிநாட்டு கடன் நீடிப்பை போன்று உள்நாட்டு கடன் நீடிப்பையும் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 

அதேபோல் ஊழியர் சேமலாப நிதியத்தின் பயனாளர்களுக்கு 9% சதவீத வட்டி அவ்வண்ணமே பெற்றுக்கொடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்பதால் எதிர்கால பலன்கள் பற்றிய நம்பிக்கையை இழக்க வேண்டாமெனவும் தொழிற்சங்க பிரதிநிதிகளிடத்தில் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தேசிய கடன் நீடிப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கும் பட்சத்தில் அபிவிருத்திக்கான உதவிகள் கிடைக்கும் எனவும் அதனால் கடந்த காலத்தில் முடங்கிக் கிடந்த நிர்மாணத்துறை உள்ளிட்ட ஏனைய துறைகளின் அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிக்க முடியுமெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார மறுமலர்ச்சியின் ஊடாக பெருமளவான தொழில்வாய்ப்புக்கள் உருவாகும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: