உணவுப் பொருள்கள் விற்பதில் அவதானம் – சுகாதாரப் பரிசோதகர்கள் !

Friday, April 6th, 2018

பண்டிகைக்காலம் இம்மாதம் முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில் பாவனையாளர்களின் நலன்கருதி நாடளாவிய ரீதியில் உணவுகள் தொடர்பில் பரிசோதனைகளை நடத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என இலங்கை பொது சுகாதார சங்கச் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பாக இவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதில் உள்ளதாவது:

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பண்டிகைக்காலக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. எனவே நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற உணவு விடுதிகளிலும் உணவு பதப்படுத்தல் நிறுவனங்களிலும் மற்றும் பொது சந்தைகளிலும் மக்கள் பாவனைக்குதவாத பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம்.

அதன் முதற்கட்டமாக நாடு பூராகவும் 2 ஆயிரத்து 500 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உணவுப் பரிசோதனைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வேலைத்திட்டத்தை நாம் இந்த மாதம் முதலாம் திகதி ஆரம்பித்துள்ளோம்.

உணவு பரிசோதனையின் போது பதனிடப்பட்ட உணவுப் பொருள்கள், குளிர்பானங்கள், தேங்காய் எண்ணெய், சீனி மற்றும் மா வகைகள் போன்றவற்றில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

பாவனையாளர்களால் அதிகம் நுகரப்படும் அதே வேளை கலப்படம் அதிகம் இடம்பெறுவதோடு காலவதியான பின்னரும் விற்பனைக்கு வைக்கப்படும் பொருள்களாக இவை இனங்காணப்பட்டுள்ளன.

மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஹோட்டல்களில் இது போன்ற சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நுகர்வோர் தங்கள் பாதுகாப்பு கருதி எந்தப் பொருளை வாங்கும்போதும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

Related posts: