உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசியக் கொள்கையொன்று உருவாக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, December 14th, 2022

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசிய கொள்கையொன்று உருவாக்கப்படும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான கூட்டு பொறிமுறைக் குழுவின் பிரதிநிதிகளை தெளிவுபடுத்துவதற்காக அலரி மாளிகையில் நேற்று(13) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு மற்றும் மக்களின் போஷாக்கு நிலையை உறுதிப்படுத்துவதற்கான தேசிய கொள்கை தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

உணவு பாதுகாப்பு மற்றும் மக்களின் போஷாக்கு நிலையை உறுதிப்படுத்துவதில் துல்லியமான தரவுகளை பெற வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது தௌிவுபடுத்தியுள்ளார்.

தேசிய மட்டம் மற்றும் பிரதேச மட்டத்தில் கிடைக்கும் தரவுகளில் பாரிய வேறுபாடுகள் காணப்படுவதாகவும் அவற்றை உடனடியாகத் திருத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே குறித்த நிகழ்வின்போது உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், தேசிய உணவுப் பாதுகாப்பிற்கு ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் மிகவும் முக்கியமானது. நாட்டில் உணவுப் பாதுகாப்போடு அந்நியச் செலாவணியையும் சேமிக்க முடியும் என்று சுட்டிக்காட்டிய பிரதமர், மக்களுக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும், அதற்கு அரச ஆதரவை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களினால் நாட்டின் விவசாயம் சில பின்னடைவுகளை சந்தித்ததாகவும், ஆனால் எதிர்வரும் பெரும்போகத்தை விவசாயிகள் வலுவாக எதிர்கொள்ளக்கூடிய பின்னணி நாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நுகர்வுக்குத் தேவையான அரிசியை முழுமையாக இந்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் அளவிற்கு இன்று விவசாயிகள் பலமாக இருப்பதாகவும், அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: