உணவகத்தின் முன் நிறுத்தும் வாகனங்களால் தவிர்க்க முடியாத விபத்துக்கள் – சாவகச்சேரி மருத்துவமனை பாதை தொடர்பில் மக்கள் கவலை!

Friday, August 10th, 2018

சாவகச்சேரி மருத்துவமனையை அண்டியுள்ள முதன்மைப் பாதையில் உணவருந்த நிறுத்தப்படும் வாகனங்களால் மருத்துவமனையிலிருந்து வாகனங்களில் வெளியே செல்லும் பொதுமக்களுக்கு ஏற்படும் மறைப்பு காரணமாக விபத்துக்கள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது.

இது குறித்து கவலை தெரிவித்த பொதுமக்கள் மருத்துவமனை வாயிலை அண்டிய பகுதியில் வாகனங்களை நிறுத்த விடாமல் தடுக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்தைக் கோரியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்துவதற்காக பல வாகனங்கள் பாதையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடராக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நோயாளர் காவு வண்டி உட்பட மருத்துவமனைக்கு வரும் வாகனங்கள் வெளிச் செல்லும் வேளையில் முதன்மைச் சாலையில் வரும் வாகனங்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் உணவகத்துக்கு வரும் வாகனங்கள் சாலையின் ஒரு பக்கத்தில் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளனர்.

நேற்று முன்தினம் பகல் 3 மணியளவில் கடமை முடிந்து வீடு திரும்பிய மருத்துவமனை பெண் பணியாளர் சாலையில் கொள்கலன் வாகனம் நின்றதால் எதிரே வாகனம் வருகிறதா எனப் பார்க்க உந்துருளியில் முன்னேறிய போது முதன்மைச் சாலையில் வந்த உந்துருளியில் மோதியதில் இருவரும் காயமடைந்தனர்.

காயமடைந்த மருத்துவமனை பணியாளரும் உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த 36 வயது நபரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts: