ஈ.பி.டி.பியின் முயற்சியால் பாஷையூர் கரையோரத்தில் 15 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் இடிதாங்கி!

Wednesday, October 10th, 2018

நீண்டகாலமாக  யாழ் மாநகரை அண்மித்த பாஷையூர் கடற்கரையோர பகுதி மக்கள் எதிர்கொண்டுவந்த இடிதாங்கி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது –

யாழ்ப்பாணம் பிரதேசத்தின் கடற்கரை பிரதேசத்தை அண்டி ஒரு இடிதாங்கி அமைக்கப்பட வேண்டும் என ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களின்போதும் யாழ் மாநகர சபை கூட்டத் தொடர்களின் போதும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் டேமியன் அவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.

யாழ் மாநகரின் கரையோர பகுதி மக்களதும், கடற்றொழிலாளர்களதும் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதில் துறைசார் தரப்பினர் அக்கறை கொள்ளாது அசமந்தமாக இருப்பதை சுட்டிக்காட்டி அண்மையில் நடைபெற்ற யாழ்ப்பாணம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும்  குறித்த விடயம் தொடர்பில் இணைத் தலைவர்களிடம் டேமியன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் தற்போது குறித்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக ரூபா 15 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 150 அடி உயரம் கொண்ட இடிதாங்கி கோபுரம் அமைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த இடிதாங்கி அமைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளமையால் பாஷையூர் கரையோர பகுதி மக்களது உயிர் பாதுகாப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: