ஈ.பி.டி.பியின் ஏற்பாட்டில் வவுனியாவில் வீதி போக்குவரத்து விழிப்புணர்வுப் பேரணி! பெருந்திரளானோர் பங்கேற்பு!!

நாட்டில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முகமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா நகரில் பாரிய விழிப்பணர்வு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தலைமையில் ஆரம்பமான குறித்த விழிப்புணர்வு பேரணி வவுனியா மத்திய தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து ஆரம்பமாகி நெடுஞ்சாலை வழியாக சென்று வவுனியா மாவட்டச் செயலகத்தை அடைந்தது.
“விபத்துக்களை தடுப்போம்” என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த விழிப்பணர்வு பேரணியின்போது சாரதிகளே மனித உயிர்களோடு விளையாட வேண்டாம், வேகமாய் போவது வாகனங்கள் மட்டுமல்ல மனித உயிர்களும்தான், உங்கள் போட்டியில் போவது அப்பாவி உயிர்களே, சாரதிகளே சிந்தியுங்கள் என பலவாறான கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை குறித்த விழிப்பணர்வு பேரணியில் கலந்துகொண்டோர் கைகளில் தாங்கியவாறு ஊர்வலமாக சென்றிருந்தனர்
பேரணியின் முடிவில் வவுனியா அரச அதிபர் கனீபா அவர்களிடம் விழிப்பணர்வில் கலந்தகொண்டோர் மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர்.
அண்மை நாள்களாக வீதி விபத்துக்கள் வடபகுதியில் குறிப்பாக வவுனியா – யாழ்ப்பாணம் நெடுஞ்சாலைக்கு இடையே பல உயிர்களை காவுகொண்டிருந்தது.
இந்நிலையில் மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது எண்ணக்கருவுக்கு அமைவாக கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன் அவர்களது ஒருங்கமைப்பில் சாரதிகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முகமாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்ற ரீதியில் குறித்த விழிப்பணர்வு பேரணி இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பேரணியில் சமூக அக்கறை உள்ள கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுநல விரும்பிகள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|