ஈரான் வான்வழித் தாக்குதல் – அவசரமாக கூடுகின்றது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை !.

Sunday, April 14th, 2024

ஈரான் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் அவசரக் கூட்டத்தைக் கோரியதற்கு அமைய ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை இன்று கூடவுள்ளது.

இதன்படி 15 நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட சபை நியூயோர்க் நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு கூடுகிறது.

கடுமையான அத்துமீறல்களுக்காக ஈரானைக் கண்டித்து உடனடியாக IRGC என்ற ஈரானின் புரட்சிக் காவலர்கள் படையை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலின் தூதர் கிலாட் எர்டன், கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த தாக்குதல் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு “தீவிரமான அச்சுறுத்தல்” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் பொதுச் சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் ஆகியோர் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பதற்றம் மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்க இஸ்ரேலும் ஈரானும் மிகுந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள தனது தூதரக வளாகத்தில் கடந்த முதலாம் திகதி வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் நேற்று (சனிக்கிழமை) இஸ்ரேலுக்கு எதிராக வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது.

இஸ்ரேல் தாக்குதலை நடத்தியதாக தெஹ்ரான் குற்றம் சாட்டியபோதும், டெல் அவிவ் அதிகாரப்பூர்வமாக அந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: