இளைய தலைமுறையினர் போதைப்பொருளுக்கு அடிமையாவதை தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம்

Saturday, January 30th, 2021



இளைய தலைமுறையினர் போதைப்பொருளுக்கு அடிமையாவதை தடுப்பதற்காக விசேட வேலைத் திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் –

எமது இளைய தலைமுறையினர் இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு இலக்காகி வருகின்றனர். மூன்று பகுதிகளாக இதனை ஒழிக்க எதிர்ப்பார்த்துள்ளோம்.

அதில் ஒன்று இயன்றளவு நாட்டிற்குள் வரும் போதைப்பொருட்களை தடுக்க எதிர்ப்பார்த்துள்ளோம். குறித்த போதைப்பொருட்களில் பெரும்பான்மையானவை ஆப்கானிஸ்தானில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஊடாகதான் வருகிறது.

குறித்த கடல் பாதைகளை அறிந்து அந்த கடல் பாதைகளில் கடற்படைக் கப்பல்களை நிறுவி அவற்றை முழுமையாக நிறுத்தவுள்ளோம்.

இரண்டாவதாக, கேள்வியை குறைத்துக்கொள்ள வேண்டும். கேள்விகளை குறைத்துக் கொள்வதற்காக நாளை பாடசாலைகளில் குழுவொன்றை அமைக்கவுள்ளோம்.

அதனூடாக போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருட்களின் ஆபத்துகள் குறித்த ஆலோசனைகளை வழங்க முடியும்.

மூன்றாவதாக, போதைக்கு அடிமையானவர்களை மீண்டும் ஒருபோதும் சிறையில் அடைக்க மாட்டோம். அவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

00



Related posts: